தமிழிலே கவிதையாய் பேசுவோம். உலகிலே இசையாய் வாழ்வோம்.
இசை உலக வரலாற்றில் இது ஒரு புதிய முயற்சி. இந்த முயற்சிக்கு என்னுள் தமிழ்க் கவியாக நதி நுழைந்ததில் பெருமகிழ்ச்சி. அதே மகிழ்ச்சியோடு உங்கள் முன் நான்.
வசீகரன்-இசைக்கனவுகள் என்னும் இந்த நிறுவனத்தை கலையின் மீது உள்ள ஆர்வத்தினால் என் வாழ்வின் ஒரு இலட்சியக் கனவாக 30.04.2003ல் ஆரம்பித்தேன். புகலிடத் தமிழர்களின் பல் துறைசார்ந்த வளர்ச்சிப் பாதையில் கலைதுறை சார்ந்த தயாரிப்பு நிறுவனங்கள் குறைவாகவே காணப்படுகின்றன. எங்களுடைய வாழ்வின் இறந்தகால, நிகழ்கால, எதிர்காலப் பதிவுகளை தரமான படைப்புகளாகப் படைப்பதற்கு பெரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அவை தோற்றுப் போவதையே அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.
அவற்றுக்கான காரணங்களைத் அலசி ஆராய்ந்த பார்க்கிற பொழுது கலைத்துறை சார்ந்த நிறுவனங்கள் வணிக ரீதியிலும் வளர்ச்சியடைய வேண்டும் அப்போது தான் எங்கள் கலைச் சொத்துகளை நவீன மயப்படுத்தி ஆவணமாகப் பாதுகாக்க முடியும் என்பதில் நம்பிக்கை உள்ளவன் நான். இந்த சிந்தனை நீண்டகாலமாகவே என்னுள் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆகவே எமது மக்களால் ஆழமாக நேசிக்கப்படுகின்ற, அவர்களின் வாழ்க்கை பற்றிப் பேசுகின்ற தரமான கலைப் படைப்புகளை உருவாக்கவேண்டும் என்பதையே இந்த நிறுவனத்தின் முதல் நோக்கமாகவும் கொண்டுள்ளேன்.
தமிழ்மொழி மேல் நான் கொண்ட காதலால் கவிதையுலகிற்குள் நுழைந்தேன். அந்தக் கவிதை மழையில் நனைந்துகொண்டே இசைப்பாடல் உலகிற்குள்ளும் நுழைந்தேன். ஒரு கலைஞன் தான் வாழும் காலத்தில் தனது ஆழமான எண்ணங்களை, கருத்துக்களை, உண்மையான உணர்வுகளை பதிவுசெய்யாது விட்டால் காலம் அந்தக் கலைஞனை பதிவுசெய்யாமல் விட்டுவிடும். இது நம் பெரியோர்கள் சொன்ன கருத்து. இதை நன்கு உள்வாங்கிக்கொண்டு ஒரு கலைஞானாக முயற்சிக்கின்றேன். இன்று எம் உயிரினும் மேலான தமிழோடும், தமிழிசையோடும் கலந்து நிற்கிறேன். யாழ் பாடும் தமிழ் மண்ணில் பிறந்த நான் இன்று காலத்தின் சுழற்சியால் கடல் கடந்து, புலம்பெயர் தமிழனாகி புதிய பூமியாம் நோர்வே மண்ணில் வாழ்ந்து வருகிறேன்.
இந்தப் புலம்பெயர் வாழ்க்கையில் அன்னியக் கலாச்சாரச் சுழலில் இணைவலையுடாக எனக்கு கிடைத்த இனிய நண்பர் வி.எஸ்.உதயா அவர்களின் உதவியோடு என்னுடைய கலைப்பயணத்தைத் தொடர்கிறேன். காதலால் என் இதயத்தில் நுழைந்த இதயத்திற்காகவும், என் இனிய தமிழ் உறவுகள் உங்களுக்காகவும் காதல் கடிதம் எனும் இசைத் தொகுப்பினை தயாரித்து முதலில் வழங்குகிறோம். இதை தொடர்ந்தும் நிறைப் படைப்புகள் வெளிவரும்.
இன்று இந்த மேற்குலக நாடுகளில் எங்கள் கலை கலாச்சாரத்தோடு தமிழ்மொழியின் விழுமியங்கள் அழிந்து போகுமோ என்ற கேள்விகளோடுதான் தமிழ் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்தப் பூமியின் எந்த விழிம்பில் நாங்கள் சிதறுண்டு வாழ்ந்தாலும் தமிழால் ஒன்றிணைவோம். எங்கள் தமிழோ, எங்கள் தாய் மண்ணின் தமிழ் அடையாளங்களோ, அழிந்து போகாமல் இருக்கவேண்டும் என எண்ணிக்கொள்கிற ஒரு இளைய கலைஞனின் சிறிய முயற்சி இதுவாகும். இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகள்.
இந்தக் கலைப் பயணம் உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் தமிழ் மணம் பரப்பி, மானிடத்திற்கு கிடைத்த மதிப்பு மிக்க நன்கொடையாம் காதலையும் வளர்க்கும் என்றே நம்புகின்றேன். என் தமிழ் உறவுகளே வாருங்கள். இளையவயதில் இனியதாய் புதுமைகள் படைப்போம். என் வாசல் தேடி மீண்டும் வாருங்கள். இந்தக் கன்னி முயற்சிக்கு உங்கள் ஆதரவையும், ஆக்கபூர்வமான கருத்துக்களையும் தாருங்கள்.
இசைக்கூடாக இளம்தலைமுறையை தமிழ்மொழியின் பக்கம் அணைத்து வைப்பதே இன்பம்.
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம். எம் தமிழால் உலகை வெல்வோம்.
அன்புடன் வசீகரன் சிவலிங்கம்
ஒரு நல்ல கவிதை என்பது, தெரியாத கவிதையை சொல்லி கொடுக்க வேண்டும். தெரிந்த கவிதையை உயிர்ப்பித்து கொடுக்க வேண்டும். வாழ்க்கை அனுபவம் இல்லாமல் எழுதுபவன் போலி எழுத்தாளன். யாருக்கெல்லாம் கவிதையோடு தொடர்பு இருக்கிறதோ, அவர்கள் வாழ்க்கையை நேசிக்க தெரிந்துவிட்டார்கள் என்று அர்த்தம் -வைரமுத்து

